Tuesday, August 9, 2016

உங்கள் வேதாகமத்தைப் பேணுங்கள்


புதிய இங்கிலாந்தின் சிறிய நகரில் ஒரு பாட்டி தம் பேரப் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் புத்தம் புதிய வேதாகமத்தை வாங்கி வந்தார். அடுத்த முறை வரும்போது அந்த வேதாகமத்தை நல்ல முறையில் பேணுகிறவர்களுக்கு 5 ஸ்டர்லிங் மதிப்புள்ள சுவையான சாக்லேட் வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.
ஜேன் அந்த பைபிளை ஒரு சுத்தமான கைத்தறி துவாளையில் மடித்து தன் ஆடைகள் வைக்கும் பேழையில் பாதுகாப்பாக வைத்தாள். ஆர்வம் நிறைந்த ஜெனி அதைத் திறந்து வாசிக்க ஆரம்பித்தாள். தேவனின் நிமித்தம் யோவான் கொல்லப்பட்ட சம்பவத்தை வாசித்த கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து அந்த வேதாகமப் பக்கங்களையும் நனைத்தன. இப்படி ஒவ்வொரு நாளும் ஓயாமல் வேதத்தை வாசிக்கத் தொடங்கினாள். அந்த வாசிப்பு அழுகையை ஏற்படுத்தியதால் அந்த பைபிளும் கந்தலாகத் தொடங்கிற்று. பாட்டி வந்தவுடன் அந்தப் பரிசு தன் சகோதரிக்குதான் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.
பல மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் பிரகாசமான காலையில் அவர்களுடைய பாட்டி சொன்னபடி வீட்டுக்கு வந்தார். இரண்டு பேத்திமார்களும் ஓடிச்சென்று வாழ்த்து கூறினர். வீட்டின் வரவேற்பறையில் நலம் விசாரித்துக் கொண்ட பிறகு, பாட்டி அந்த பைபிளைப் பற்றி விசாரித்தார். ஜேன் பிரகாசித்த முகத்தோடு மிகவும் நேர்த்தியாக துவாளையில் மடித்து வைக்கப்பட்ட அந்த புத்தம் புதிய பைபிளைத் திறந்து பாட்டியிடம் காட்டினாள். கொஞ்சம் தயக்கம் காட்டிய ஜெனி, தன் பைபிளையும் தட்டுத் தடுமாறி பாட்டியிடம் கொடுத்தார். அதைத் திறந்து பார்க்கும் போது கண்ணீர் துளிகள் படிந்த அந்த வேதாகமப் பக்கங்களைப் பார்க்க நேர்ந்தது. கண்ணீர் மல்க ஜெனியைக் கட்டிப் பிடித்து, “மகளே, நீதான் பைபிளை அக்கறையோடு பேணி வந்தாய். எனவே, நான் வாக்கு கொடுத்த பரிசு உனக்குத்தான்” என்று கூறி சாக்லேட்டையும் கொடுத்தார். அதிர்ச்சியடைந்த ஜேன் தன்னுடைய புத்தம் புதிய பைபிளை ஜெனியினுடையதோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். “பாட்டி, உங்கள் செய்கை எனக்குப் புரியவில்லை” என்றாள்.  “என்னுடைய பைபிள் புத்தம் புதிதாகி இருக்கிறது, அவளுடையதோ கிழிந்து கந்தலாக இருக்கிறது,” என்றாள்.
அவர்கள் இருவரையும் இழுத்துப் பிடித்து தன் மடியில் அமரச் செய்த பாட்டி, “வேதாகமம் வாசிக்கப்படும்போதுதான் நன்றாகப் பேணப்படுகிறது”, என்று விளக்கினார்.

No comments:

Post a Comment